சிறையிடப்படுபவர்களின் நலனோம்புகையை நோக்காகக்கொண்டு ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தையொட்டிய கொடி வாரத்தை ஆரம்பித்து, அதன் முதலாவது கொடியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் பீ.கே. கிரிவந்தெனியவினால் ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டது.

சிறையிடப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிப்பதற்காக இலங்கை சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் இக்கொடி வாரம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

சிறைக் கைதிகளுக்கான மருத்துவ சிகிச்சை, மூக்குக் கண்ணாடி விநியோகம், துப்பரவேற்பாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள், சிறைக் கைதிகளின் குடும்பங்களுக்கான பல்வேறு சமூகநலத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியன இதன்மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க, சங்கத்தின் உப தலைவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் லயனல் வீரசிங்க, வளவாளரான சூலா சமரவிக்கிரம ஆகியோர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவினர் கலந்துகொண்டனர்.