இலங்கை - தொன்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1:1 என்ற சமனிலையில் இருக்க இன்றைய போட்டி தீர்க்கமானதாக அமையும்.

எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிகள் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

இறுதியாக இலங்கை அணி 2019/20 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது. 

அப்போதிருந்து தொடர்ச்சியாக மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான நான்கு ஒருநாள் தொடர்களிலும் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

தென்னாபிரிக்க அணியை நோக்குகையில் அவர்களும் 2019/20 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் வென்றுள்ளனர்.

அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானிடம் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தனர். அயர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

அந்த வகையில் இரு அணிகளும் கடந்த இரண்டு வருடங்களில் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை.

இந் நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அந்த பதிவினை மாற்றியமைக்கும்.

தசூன் ஷனகா அணித் தலைவராக பொறுப்பை ஏற்ற பிறகு மூன்று வடிவங்களிலும் இலங்கை அணி வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 

அதற்கு எடுத்துக்காட்டாக ஏறக்குறைய 18 மாதங்களுக்குப் பிறகு இலங்கை அணி சுற்றுலா தென்னாபிரிக்காவுடனான முதல் போட்டியில் 300 ஓட்டங்களை கடந்தது. 

எனினும் இரண்டாவது போட்டியில், இலங்கை பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் மற்றும் களத்தடுப்பில் சொதப்பல் ஆகியன தேல்விக்கு வழிவகுத்தது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர் மினோட் பானுகா மற்றும் பானுக ராஜபக்ஷ இருவரும் இரு ஆட்டங்களில் சோபிக்கத் தவறியுள்ளனர். 

அதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டு, தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரை அணியில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியை இலக்காகக் கொண்டு இலங்கை அணி நேற்று (06) காலையும் தென்னாபிரிக்க அணி மாலையும் பிரேமதாசா மைதானத்தில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்த தினேஷ் சந்திமால் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. இந்த பயிற்சியில் குசல் ஜனித் பெரேராவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Image