பரா ஒலிம்பிக்கில் முதலிடத்தை தன்வசப்படுத்தியது சீனா 

Published By: Digital Desk 2

06 Sep, 2021 | 07:20 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நேற்றுடன் நிறைவடைந்த ‍16 ஆவது பரா ஒலிம்பிக்கில்  96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தமாக 207 பதக்கங்களை வென்ற சீனா முதலிடத்தை தன்வசப்படுத்தியது. 

41 தங்கம், 38 ‍வெள்ளி, 45 வெண்கலம் வென்ற பிரித்தானியா இரண்டாவது இடத்தையும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் வென்ற அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வரவேற்பு நாடான ஜப்பான் 13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 51 பதக்கங்க‍ளுடன் 11 ஆவது இடத்தை பிடித்தது.

 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ பரா ஒலிம்பிக்   கொரோனா வைரஸ் பாதிப்பால்,  2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டன. பெரும் சிரமத்தின் மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக்கு போட்டியாகட்டும், டோக்கியோ பரா ஒலிம்பிக்  போட்டியாகட்டும் இந்த இரண்டு போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு ஐப்பான் ஒலிம்பிக் குழு, ஜப்பான் பராலிம்பிக் குழு ஆகிய இரண்டுமே கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டன. 

160  நாடுகளும் 2 அணிகளிலிருந்து  மொத்தமாக 4400 க்கும் அதிகமானோர் 22 வகையான விளையாட்டுக்களின் 539 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

தொடரும் சீனாவின் ஆதிக்கம்

கடந்த 2004 எதென்ஸ் பராஒலிம்பிக்கிலிருந்து தொடர்ச்சியான ஐந்து தடவைகள் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2004  எதென்ஸில் 63 தங்கப் பதக்கங்களுடன் 141 பதக்கங்களும், 2008 பீஜிங்கில் 89 தங்கப் பதக்கங்களுடன் 211 பதக்கங்களும், 2016 ரியோவில் 107 தங்கப்பதக்கங்களுடன்  239 பதக்கங்களும் கைப்பற்றியிருந்தன.  

பராஒலிம்பிக் வரலாற்றில் ஐக்கிய அமெரிக்கா 1964, 1968, 1976,1980, 1984,1988, 1992, 1996 , 2000 ஆகிய ஒன்பது தடவைகள் முதலிடம் பிடித்து கோலோச்சியிருந்தது. இதில்  1976   லிருந்து 2000 ஆம் ஆண்டு வரையான ஏழு தடவைகள் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்தது அமெரிக்கா.

இலங்கைக்கு முதல் தங்கம்

1996 அட்லாண்டா பரா ஒலிம்பிக்கிலிருந்து பங்கேற்று வரும் இலங்கை முதன் முதலாக  2012 லண்டன் பரா ஒலிம்பிக்கிலேயே முதலாவது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான டி46 பிரிவின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பிரதீப் சஞ்சய பரா ஒலிம்பிக்கில் இலங்கையின் பதக்கக் கணக்கை ஆரம்பித்தார். 

அதன் பின்னர் 2016 ரியோ பரா ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த, தற்போது இலங்கை விளையாட்டுத் துறையில் புதிய பக்கத்தை துவக்கினார். டோக்கியோ பரா ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான எப் 46 ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரம் வீசி உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார்.  

மேலும், பரா ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்ற துலான் கொடிதுவக்கு ஆண்களுக்கான எப்.64 ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இம்முறை பரா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்,  ஒரு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றிய இலங்கை பதக்கப் பட்டியலில் 59 ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவுக்கு 5 தங்கம்

 1968 முதல் 12 தடவைகள் பரா ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்தியா 1976 மற்றும் 1980 ஆகிய இரண்டு பரா ஒலிம்பிக்களில் பங்கேற்கவில்லை. டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக்கு   முன்னர்  மொத்தமாகவே 4 தங்கம்,  4 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தமாகவே 12 பதக்கங்களையே கைப்பற்றியிருந்தது. எனினும், இம்முறை டோக்கியோர பராஒலிம்பிக்  2020 இல் மாத்திரம் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 19 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 24 ஆவது இடத்தை பிடித்தது. 

பாகிஸ்தானின் தனி ஒருவன் 

 1992 பார்ஸிலோனா பரா ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் முதன்முறையாக பங்கேற்றியதிலிருந்து இதுவரை 3 பதக்கங்களை மாத்திரமே வென்றுள்ளது. இதில் என்ன விசேடமென்றால், இந்த மூன்று பதக்கங்களையும் வென்று கொடுத்தவர் தனி ஒருவர் மாத்திரமே ஆவார். மேலும், இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் இம்முறைதான் முதல் முறையாக தங்கப் பதக்கமொன்றை வென்றெடுத்தது.

இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஹய்தர் அலி.  இவர், 2008 பீஜிங் பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான எப்.37/38 பிரிவின் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கமும், 2016 ரியோ  பரா ஒலிம்பிக்கில் நீளம் பாய்தலின் பிரிவு எப்.37 இல் வெண்கலம் பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து, தட்டெறிதலில் அதிக கவனம் செலுத்திய ஹைதர் அலி 55.26 மீற்றர் தூரம் வீசி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

சவால் விடுத்த அஸர்பய்ஜான்

ஜப்பான்,பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய முன்னனி நாடுகளுக்கு சவால் விடுத்து பதக்கப் பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்தது அஸர்பய்ஜான்.முன்னர் சோவித் யுனியனின் கீழிருந்த அஸர்பய்ஜான் டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் 14 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றது. 

வென்றெடுத்த 14 தங்கப் பதக்கங்களில் 6 தங்கப் பதக்கங்கள்  ஜூடோவில் கைப்பற்றப்பட்டமை கவனிக்கத்தக்க விடயமாகும். ஏனைய 8 தங்கப் பதக்கங்களில் மெய்வல்லுநரில் 4 தங்கமும், நீச்சலில் 4  தங்கமும் கைப்பற்றப்பட்டன.

அடுத்தது பாரிஸில்

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதியன்று முதல் செப்டெம்பர் வரை நடைபெற்ற 16 ஆவது பரா ஒலிம்பிக்கின் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.  இந்த நிறைவு விழாவில் வண்ணமயமான ஒளி விளக்குகள், வாண வேடிக்கைகள் என்பன கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. அடுத்த பரா ஒலிம்பிக்  2024 இல் பாரிஸில் நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பின்கள வீரர்களின் தவறுகளாலும் கோல்காப்பாளரின் கவனக்குறைவாலும்...

2024-10-10 19:17:14
news-image

இலங்கை - மியன்மார் அணிகள் மோதும்...

2024-10-10 14:20:01
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு...

2024-10-10 01:23:03
news-image

இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை...

2024-10-09 23:44:54
news-image

இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக்...

2024-10-09 20:21:33
news-image

இலங்கையுடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப்...

2024-10-09 19:40:45
news-image

இந்தியாவில் சர்வதேச மாஸ்டர் லீக்; இலங்கை...

2024-10-09 16:52:43
news-image

கட்டாய வெற்றிக்காக இலங்கை, இந்திய மகளிர்...

2024-10-09 14:40:11
news-image

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66...

2024-10-08 23:48:29
news-image

20இன் கீழ் மத்திய  ஆசிய சங்க...

2024-10-08 23:21:20
news-image

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை...

2024-10-08 16:28:06
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024:...

2024-10-08 15:00:26