(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

மக்கள் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் அவசரகால சட்டமல்ல, வேறு எந்த சட்டத்தையும் பயன்படுத்தி மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

யுத்தத்திற்கு பயன்படாத வாள் பின்னர் எதற்கு? அதேபோல் மக்களின் நலன்களுக்கு பயன்படாத சட்டம் நடைமுறையில் இருப்பதில் பயனென்ன? என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 

நெருக்கடி நிலையில் எதிர்க்கட்சியினர் வைரசுடன் கூட்டு சேர்ந்து அரசாங்கத்தை வீழ்த்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். இப்போது எதற்கு என்ற கேவிக்குக்கு எம்மிடம் பதில் உள்ளது. 

நாடு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தபோதிலும் ஒரு சந்தர்ப்பதிலேனும் நாம் உணவு பஞ்சத்திற்கு முகங்கொடுக்க வில்லை.

கொவிட் வைரஸ் தாக்கத்தின் பின்னரே இதன் தாக்கம் எமக்கு வெகுவாக விளங்கியது. வெளிநாட்டு கையிருப்பு, பொருளாதாரம் என்பனவற்றில் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

ஒரு நாளைக்கு நாட்டை முடக்குவதனால் 15 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது. வருடாந்த வருமானம் 41 பில்லியன் ரூபாவாகும். அதில் பதினைந்து பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது என்றால் மிகப்பெரிய தாக்கமாகும்.

இவ்வாறான சூழலில்தான் அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொண்டுள்ளது. நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கப்படுகின்றவேளையில், மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிலையில் அதனை தடுக்காது வேடிக்கை பார்ப்பதற்கு எதற்கு அரசாங்கம் ?

அதனை தடுக்க ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். இது அனைத்துமே மக்களுக்காகவே செய்யப்படுகின்றது. 

மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டம் மட்டுமல்ல, எந்த சட்டத்தையும் கையாள நாம் தயாராகவே உள்ளோம். மக்களும் அதனை வரவேற்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சி மட்டுமே அதனை எதிர்கின்றது என்றார்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.