இராஜதுரை ஹஷான்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார பாதிப்புக்களை சீர் செய்வதற்காக  உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட  அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் நிறைவுப் பெறும் இதன் பின்னர் நாடு வழமை நிலைக்கு திரும்பும் என சமுர்த்தி, மனைப்  பொருளாதாரம், நுண்நிதி மற்றும் சுய தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார மட்டத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருள் இறக்குமதி மற்றும் சேவை விநியோகத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை  அரசாங்கத்தின்  தவறான முகாமைத்தும் என கருத முடியாது.

கொவிட் -19 வைரஸ்பரவலை கட்டுப்படுத்தி   சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டை வழமை கொண்டு வருவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும்.

எதிர்க்கட்சியினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கான அனைத்து செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

பல்வேறு விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் கடந்த மாதம் வரை சுமார் 147 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தார்கள்.

இதன்போது சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. தற்போதைய தேசிய அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு என்பதால் அரச ஊழியர்களது மாத சம்பளம் குறைக்கப்படவில்லை. அத்துடன் அரசினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகளும்  இடை நிறுத்தப்படவில்லை. அனைத்து கொடுப்பனவுகளும் உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.