சர்வதேச வெசாக் தின உற்சவத்தை 2017 இல் இலங்கையில் நடாத்துவதற்கு கிடைத்தமையானது பௌத்த மக்களுக்கு கிடைத்த  விசேட வாய்ப்பாக கருத முடியும் என்பதுடன், இவ்விழா ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

பௌத்த நாடுகளை மையப்படுத்தி வருடா வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின உற்சவம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.

சர்வதேச வெசாக் தின உற்சவத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, காம்போஜியா, வியட்நாம், மியன்மார், லாவோஸ், திபெத், பூட்டான், மொங்கோலியா உள்ளிட்ட பௌத்த நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ் வெசாக் தின உற்சவத்தை அரச அனுசரணையுடன் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது அமைச்சுக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பணிப்புரை விடுத்தார். 

அவ்வாறே இச்சர்வதேச வெசாக் தின உற்சவ ஏற்பாடுகளுக்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷயிற்கு ஆலோசனை வழங்கினார்.

இவ் உற்சவத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஏற்புடைய முன்னேற்ற மேற்பார்வைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியின் தலைமையில் மாதாந்தம் கூட்டமொன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் கலைப் பட்டதாரி சங்கைக்குரிய திருகோணமலை ஆனந்த மகா நாயக்க தேரர், சங்கைக்குரிய நியங்கொட தர்மசிறி ஸ்ரீ சங்கரக்கித்த விஜித்தசிறி அபிதான அநுநாயக்க தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.