ஆர்.ராம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைப்பதற்காக கடிதமொன்றை வரைந்து வருகின்றார் என்ற விடயத்தினை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோவும், புளொட்டும் அறிந்திருந்தபோதும் அதனை பொருட்படுத்தாது பிறிதொரு கடிதத்தில் கையொப்பமிட்டமைக்கான தெளிவுபடுத்தலை அத்தரப்பினரிடத்தில் கோர வேண்டும் என்று அவசரமாகக் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தன் இந்த தெளிவுபடுத்தலை பங்காளிக்கட்சிகளிடத்தில் கோரவேண்டும் என்று வலியுறுத்துவது எனவும் அக்கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் நடைபெற்றது. கூட்டம் கூடுவதற்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அரசியல் பீட அங்கத்தவர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் பீட உறுப்பினர்களாக, கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், மற்றும் உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், சிறிதரன், சுமந்திரன், துரை ரட்ணசிங்கம், கலையரசன், குலநாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பபட்ட மற்றும் அனுப்பபடவுள்ள கடிதங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிந்தது. இச்சமயத்தில், புளொட், ரெலோ ஆகியன கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தரப்புக்களுடன் இணைந்து ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

முதலில் குறித்த கடிதம் தொடர்பில் ரெலோ, புளொட்டுடன் அடுத்துவரும் தினங்களில் கலந்துரையாடி முடிவெடுப்போம் என்று கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தபோது, வீரகேசரி வாரவெளியீட்டில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு அனுப்புவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே இணங்கியதன் பிரகாரம் சுமந்திரன் ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கான கடிதத்திற்கான வரைவினை தயாரித்து அவர்களுக்கு ஏன் அனுப்பப்படவில்லையா  என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

அதன்போது, சுமந்திரன், கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் தான் இடையில் அழைக்கப்பட்டபோது, தான் சம்பந்தனால் ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்று அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவது பற்றி கூறியதாகவும் அதன் பின்னர் அவர்கள் அக்கடிதத்தில் உள்ளீர்க்கப்படும் சில விடயங்கள் பற்றி ஆராய்ந்து குறித்த கடிதத்தினை அனைவரும் கையொப்பமிட்டு ஒன்றிணைந்து அனுப்புவதாகவும் தெரிவித்தார் என்ற விடயத்தினை கூறினார்.

இவ்வாறு தான் தன்னிடத்தில் குறித்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட சுமந்திரன் மறுதினமான கடந்த மாதம் 23ஆம் திகதி ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேன் தன்னைத் தொடர்பு கடித வரைவு குறித்து பேசினார் என்றும்  கூறினார்.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் செல்வம் அடைக்கலநாதனும் தொலைபேசி ஊடாக பேசினார் அதன்போது வரைவு தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையும் அது சம்பந்தனிடத்தில் இறுதி செய்வதற்காக அனுப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தேன். அதன் பின்னர் அவர் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

எனினும் மின்னஞ்சல் ஊடாக அவர்கள் ஒரு வரைவினை அனுப்பினார்கள். பின்னர் அந்த வரைவு எவ்வாறு  இருக்கின்றது அதில் கையொப்பம் இடுமாறு கோரினார்கள் என்றும் சுமந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில் செயலாளர் சத்தியலிங்கம், சிறிதரன் ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பினீர்களா என்ற வினாவைத் தொடுத்தார். அச்சமயத்தில் சிறிதரன் நான் இப்போது அனுப்பவில்லை என்று மட்டும் பதிலளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மாவை சேனாதிராஜா கட்சியின் தீர்மானமின்றி ஏனைய ஒருங்கிணைவு கூட்டங்களில் பங்கேற்பது தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தனிநபராக அவர் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்பதும் அதில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு மறுப்பில்லாது இசைவதால் பின்னர் ஏற்படுகின்ற சர்ச்சைகள் கட்சிக்கு மேற்கொள்ளப்படும் சேறடிப்புக்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கூட்டமைப்பின் தலைமை கடிமொன்றை வரையும்போது அதனை அறிந்திருந்தும் பங்காளிகள் அதனை புறக்கணித்தமை தொடர்பில் உரிய விளக்கத்தினை தலைமை பெறவேண்டும் என்று தமிழரசுக்கட்சி வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து நேற்றையதினமே கூட்டமைப்பின் தலைவரிடத்தில் தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடக் கூட்டங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.