பௌத்த மதம் என்ற ரீதியில் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் ஆண்டாக எதிர்வரும் ஆண்டினைத் திட்டமிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேரவாத பௌத்தின் தலைமையகமாக இலங்கையை மாற்றுவதற்காக  நடைமுறைப்படுத்தப்படும் மகா தர்ம பரப்புரை நிகழ்ச்சித்திட்டமானது, முப்பீடங்களின் தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி நேற்று அம்பலாங்கொடை பொல்வத்த ஸ்ரீ அக்காராம விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வின்போது குறிப்பிட்டார்.

அமரபுரம் மகா நிக்காயாவின் கல்யாணிவன்ச பீடத்தின் அநுநாயக்கர் பதவியில் அமர்த்தப்பட்ட கலை பட்டதாரி சங்கைக்குரிய நிந்தானே வஜிரஞான நாயக்க தேரருக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் பொருட்டு இப்புண்ணிய நிகழ்வு நடைபெற்றது.

புதிதாக அநுநாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் மற்றும் விஜினி பத்திரம் ஆகியவற்றை இதன்போது ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, கல்விகற்ற பௌத்த தேரர்களின் சேவையினை இன்று எமது நாடு பெரிதும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். 

வாணிப உலகில் நாளுக்கு நாள் பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தை குணப்படுத்துவதற்கான ஒரேயொரு வழியாக பௌத்த சிந்தனை உள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் நடைபெறும் சர்வதேச வெசாக் உற்சவத்தினை வெகு விமர்சையாக கொண்டாடுவதாகவும் இதற்கு உலகின் அனைத்து பௌத்த நாடுகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய அநுநாயக்க பதவியில் அமர்த்தப்படும் கலைப் பட்டதாரி நிந்தானே வஜிரஞான நாயக்க தேரர் அம்பலாங்கொடை பொல்வத்த ஸ்ரீ அக்காராம கொபைத்துடுவ ஸ்ரீ பஷ்சிமாராம மற்றும் தொரல பூர்வாராம ஆகியவற்றின் விஹாராதிபதி பதவி வகிப்பதுடன், அவர் அம்பலாங்கொட தேவானந்த வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் ஆவார். 

அமரபுர மகா நிக்காயாவின் கல்யாணிவன்ச பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய தொடம்பஹல சந்திரசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசவாழ் பெருந்தொகையான பௌத்தமக்கள் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.