வட மாகாண முதலமைச்சா் தலைமையிலான குழுவினா் நேற்று திங்கட்கிழமை இரணைமடுக் குளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனா்.

நேற்று மாலை மூன்று முப்பது மணிக்கு இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சா் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும்  நீா்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  விளக்கங்களை கேட்டறிந்துகொண்ட பின்னா் நேரடியாக குளத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த அபிவிருத்திக்கு தேவையான மணலை  குளத்தின் நீரேந்துப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மூன்று திணைக்களங்களான வனவளத் திணைக்களம், கனியவள திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பன தடை ஏற்படுத்தியமையினால் அபிவிருத்திப் பணிகளுக்கு தடை ஏற்பட்டதுடன் பெரும் சா்ச்சையும் நிலவியது இது தொடா்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மணலை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சரால் ஆராயப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சா்,

இவ்வாறான விடயங்களை உடனடியாக எனது கவனத்திற்கோ அல்லது எனது செயலாளரின் கவனத்திற்கோ  கொண்டுவாருங்கள். நீங்கள் எங்களை வருத்தினாலும் பரவாயில்லை பிரச்சினைகளை  எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் அதனை உரியவா்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். 

இனிவரும் காலங்களில் அதிகாரிகள் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ளும் போது அதனை கையாள உயா்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவா்களே  உரிய திணைக்களங்கள் அல்லது அரசாங்கத்துடன் அல்லது அமைச்சர்களுடன்  பேசி நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புக் கிட்டும் எனத் தெரிவித்த முதலமைச்சா், இந்த போக நெற்செய்கையும் இல்லாமல் போய்விட்டது அடுத்த போகமும் இல்லாமல் போகக் கூடிய நிலைமை இருக்கிறது. 

எனவே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் இது சம்மந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனேகமாக அடுத்த போகமும் அவா்களுக்கு கிடையாது என்று தெரிகிறது. எனவே வரட்சி காலங்களில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கின்றோமோ அவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது உலா் உணவு வழங்கல் போன்றவற்றை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. அபிவிருத்தியில் ஏற்பட்ட தாமதம் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதனை நாங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். 

ஆகவே இவ்வாறான விடயங்களை நீங்கள் கூடிய விரைவில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம். இதன் தொடா் விளைவுகளை எல்லோரும் அறிந்த வைத்திருந்தால் முன்னேற முடியும் என்பதனையும் கூறி வைக்க விரும்புகிறேன்  எனவும் தெரிவித்தார்

 

இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான ஜங்கரநேசன், குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், வட மாகாண எதிர்க்கட்சி தலைவா் தவராசா, மாகாண சபை உறுப்பினா்களான அரியரட்ணம், சிவாஜிலிங்கம், தவநாதன், முல்லைத்தீவு அரச அதிபா் திருமதி றூபவதி கேதீஸ்வரன், விவசாய அமைச்சின் செயலாளா்  நீா்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகெண்டனா்.