(நா.தனுஜா)

ஒருகிலோகிராம் கோதுமை மாவிற்கான உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையாக 87 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு முரணான வகையில் ஒருகிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்றீமா நிறுவனம் தீர்மானித்துள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவிடம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, '2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச்சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின்கீழ் கோதுமை மாவிற்கான நிர்ணயவிலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் நேற்று கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

எனவே இதுகுறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் அதேவேளை, அதிகவிலைக்கு கோதுமை மாவைக் கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அக்கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து அவ்வமைப்பினால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.