குமார்சுகுணா

காலநிலை மாற்றத்தின் விளைவாக உலகில் இயற்கை சீற்றம்  அதிகரித்துக்கொண்டு வருகின்றது. பல நாடுகளில்  காட்டுத்தீ, மழை, வெள்ளம், கடல் சீற்றம் என அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவையும் இயற்கை சீற்றம் விட்டு வைப்பதாக இல்லை. அந்தவகையில் 90 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவை  ஐடா புயல் தற்போது  புரட்டிப் போட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்  ஐடா புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயோர்க், நியூஜெர்சி, பிலடெல்பியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

நியூயோர்க் நகரில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். நியூ ஜெர்சியில் 23 பேர் பலியாகினர். பென்சில்வெனியாவில் 5 பேர் பலியானதாகத் தெரிகிறது.

ஐடா புயலால் மிகப்பெரிய மின் தொகுப்பு சேதமடைந்ததால் லூசியானா, மிசிஸிப்பி மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

புயல் பாதித்தப் பகுதி வாழ் மக்கள் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். மேலும்அவர் புயல் தாக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

இது குறித்து பைடன், கல்ஃப் கோஸ்டில் உள்ள மக்களுக்கு நான் இதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நேரில் வருகிறேன். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஐடா புயல் குறித்து நியூ ஜெர்சி மேயர் பில்மர்பி கூறுகையில், அடிக்கடி புயல் வருகின்றன. முன்பைவிட மிகுந்த வலிமையுடன் தாக்குகின்றன.

பருவநிலை மாறுதல் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதேபோல் நியூயோர்க்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சக் ஸ்கூமரும், பருவநிலை மாற்றம் விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு வாரத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகிறது என்றால் அது ஏதோ புயலுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய நிகழ்வு மட்டுமல்ல பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை. புவிவெப்பமயமாதலின் தாக்கத்தை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 90 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட கடுமையான புயல் ஐடா எனக் கூறப்படுகிறது. சமீப காலத்தில் கட்ரினா புயல் கோரமானதாக அறியப்பட்டது.

ஆனால் அதையும் தாண்டி ஐடாவின் பாதிப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. நியூயோர்க் மத்திய பூங்காவில் ஒரே நாளில் 14.5 செ.மீ. மழை பதிவானது.

கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சுரங்கப்பாதைகள் மூழ்கிவிட்டன. மழை நீர் தேங்கியிருக்கும் சூழலில் மின்சாரமும் மீட்க முடியாமல் உள்ளது. ஜோ பைடன் அரசுக்கு இது மிகப்பெரிய இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஜெர்மனி, பெல்ஜியம், ப்ரூசல்ஸ், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடா புயலின் கோர தாண்டவத்தால் மோசமாக காட்சியளிக்கிறது நியூஜெர்சி மாகாணத்தின் தெற்குப் பகுதியான முல்லிகா ஹில். கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட்டுமானங்களும் புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்திருக்கின்றன.

15 முதல் 20 சென்றி மீற்றர் அளவுக்கு மழை பெய்ததால், பிரதான சாலைகள், ரயில்வே சுரங்கப் பாதைகள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் சுமார் 2 இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி  பலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐடா புயலால் நியூயோர்க் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கை சந்தித்திருக்கிறது. புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு என அடுத்தடுத்த பாதிப்புகள் காரணமாக நியூயோார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையும் கொட்டி தீர்த்திருக்கிறது. புவி வெப்பமயமாதலின் தாக்கமே இதற்கு காரணம் என ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.