சாதனை நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 04:38 PM
image

குமார்சுகுணா

சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

உலக கால்பந்து அரங்கில் வீரர்களில் ‘நம்பர்–1’ கதாநாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கும்  போர்த்துக்கல் அணி தலைவர் ரொனால்டோ  பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் . இந்நிலையில் தற்போது உலகில் அதிகம் கோல் அடித்தவர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு போர்த்துகலின் ஸ்போர்டிங் சி.பி அணியில் தொடங்கிய அவர், மன்செஸ்டர் யுனைடட், ரியல் மாட்ரிட், யுவன்டஸ் என ஐரோப்பாவின் பல முன்னணி அணிகளுக்கு விளையாடியிருக்கிறார். கிளப் கால்பந்தில் சுமார் 650 கோல்களுக்கும் அதிகமாக அடித்திருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு லீகிலும் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார். பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஆ என மூன்று பெரிய லீக் பட்டங்களையும் வென்ற ஒரே வீரர் அவர்தான். 

யுனைடட், மாட்ரிட் இரண்டு அணிகளுக்காகவும் செம்பியன்ஸ் லீக் வென்றிருக்கிறார். இரண்டு அணியில் இருக்கும் போதும் பாலன் டி ஓர் விருது வென்றிருக்கிறார். இதுவரை 5 பாலன் டி ஓர் விருது வென்றிருக்கும் ரொனால்டோ, செம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் 5 முறை வென்றிருக்கிறார்.

ஐரோப்பிய கோல்டன் ஷூ, பிஃபா பிளேயர் ஒப் தி இயர், புஸ்கஸ் அவார்ட் என இவர் வாங்காத விருதுகளே இல்லை. வெற்றி பெறவேண்டும் என்ற தன்னுடைய  இலக்கில் அணியின் செயல்பாட்டையும் பல மடங்கு அதிகரிக்கும் வீரர் இவர். கிளப் கால்பந்தில் எந்த அளவுக்கு சாதனை படைத்திருக்கிறாரோ அதே அளவுக்கு சர்வதேச கால்பந்திலும் பல சாதனைகள் படைத்திருக்கிறார்.

போர்த்துகல் அணிக்காக அண்டர் 15, அண்டர் 17, அண்டர் 20, அண்டர் 21, அண்டர் 23 என ஒவ்வொரு பிரிவிலும் விளையாடியிருக்கும் அவர், சீனியர் அணியில் 18 வயது இருக்கும்போதே அறிமுகமாகிவிட்டார். 2004 யூரோ தொடருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கிரீஸ் அணிக்கான குரூப் போட்டியில் தன் முதல் சர்வதேச கோலை அடித்தார். அன்று தொடங்கிய அந்த கோல் மழை இன்றுவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

2004 யூரோ கோப்பையில் 2 கோல்கள். 2006 உலகக் கோப்பையில் 1 கோல். 2008 யூரோ, 2010, 2014 வேர்ல் கப் ஆகிய 3 தொடர்களிலும் தலா 1 கோல். 2012 யூரோவில் 2 கோல்கள் என ஒவ்வொரு தொடரிலும் தவறாமல் கோல் அடித்துக்கொண்டே இருந்தார். இருந்தாலும் போர்த்துக்கலால் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை. கிளப் அளவில் பல்வேறு சாதனைகள் படைத்தவருக்கு அது பெரும் குறையாக இருந்தது. ஆனால், 2016 யூரோவில் அதையும் வென்றார். அந்தத் தொடரில் 3 கோல்கள் அடித்த ரொனால்டோ, தலைவனாக தன் அணியை, வீரர்களை நன்றாக வழிநடத்தினார். சுமாரான அணி, அவரது கோல்களால்... ஏன் அவர் இருந்ததாலேயே பலமடங்கு பலமடைந்தது.

2018 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே சாம்பியன் ஸ்பெய்னுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார் ரொனால்டோ. மொராக்கோவுக்கு எதிராகவும் கோல் அடித்து, 4 கோல்களோடு அந்த உலகக் கோப்பையை நிறைவு செய்தார். 2019 UEFA நேஷன்ஸ் லீகில் சுவிட்சர்லாந்துக்கு எதிராகவும் ஒரு ஹாட்ரிக். அந்தத் தொடரையும் வென்றது போர்த்துகல்.

கடந்த யூரோவின் முதல் போட்டியிலேயே ஹங்கேரிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்தார். அந்தப் போட்டியில் களமிறங்கியபோது அதிக யூரோ தொடர்களில் விளையாடியவர் என்ற சாதனை படைத்த கிறிஸ்டியானோ, அந்தப் போட்டி முடியும்போது யூரோவில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பிளாடினியின் சாதனையை முறியடித்திருந்தார். ஜெர்மனிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஒரு கோல் அடித்தவர், பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்தார். அதன்மூலம், சர்வதேச அரங்கில் 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்த அலி தாய் சாதனையை சமன் செய்தார்.

தற்போது சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். உலகக்கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றில், அயர்லாந்து குடியரசுக்கு எதிரான போட்டியில் 2 கோல்களை போட்டதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் 111 கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டுள்ளார்.

1993 முதல் 2006 வரை ஈரான் அணியில் விளையாடிய அலி டாய் (Ali Daei) 109 கோல்களை போட்டதே இதுவரை உலக சாதனையாகவிருந்தது. 2020 யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பிரான்ஸிற்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை போட்டு இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ சமப்படுத்தியிருந்தார். 90 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச கோல்களை போட்ட வீரர்களாக அலி டாயும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மாத்திரமே பதிவாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய உலக சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

விளையாட்டு வீரர் என்று மற்றும் இல்லாமல் இவர் மிக சிறந்த மனிதரும் கூட. ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்த பழக்கங்களை வெறுக்கின்றார். ரொனால்டோவுக்கு 20 வயதாக இருந்தபோது, அவரது தந்தை ஜோஸ் குடிப்பழக்கம் தொடர்பான சிக்கல்களால் இறந்தார். அவர் பல முறை தனது அப்பாவை மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்ல முயன்றார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஜோஸ் உதவியை மறுத்துவிட்டார். இந்த இழப்பின் விளைவாக, ரொனால்டோ மதுவைத் தொட மறுக்கிறார். மேலும் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற அவர் விரும்பவில்லை. மற்றும் இவர் தனது உடலில் எவ்வித டேட்டுகளும் (பச்சை குத்துதல்) இட்டுக் கொள்ள மாட்டார், காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர். அவரது சாதனைகள் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துவோம்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்