பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு தற்போது சுமார் 8 மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 

இந்நிலையில் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

அதுமாத்திரமன்றி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவும் இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கின்றார். 

இருப்பினும் இதுகுறித்து தற்போது வரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பிற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்கள்கூட பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. 

அவ்வாறிருக்கையில் எவ்வித ஊழல் மோசடிகளிலும் ஈடுபடாத நேர்மையான அரசியல்வாதியும் சிறந்த கலைஞருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இது மிகவும் வலுவான தண்டனை என்றே கருதுகின்றோம். 

எனவே பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

 

 கொழும்பில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.