திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான மணிரத்னம் மீது பீட்டா (PETA) எனப்படும் விலங்குகள் நல அமைப்பு கொடுத்த புகாரின் கீழ் தெலுங்கானா மாநில பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான மணிரத்னம் தற்போது அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலைத் தழுவி, அதேபெயரில் திரைப்படம் ஒன்றை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார். 

பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

படப்பிடிப்பின்போது ஐதராபாத்தை சேர்ந்த ஏராளமான குதிரைகளும் பங்குபற்றியது. 

இந்நிலையில் படபிடிப்பில் பங்குபற்றிருந்த குதிரை ஒன்று இறந்து விட்டது. இதனை அறிந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான மணிரத்னம் மீதும், குதிரையின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்துல்லாஹ்புர்மெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரில், 'இறந்துபோன குதிரை போதிய இடைவெளியின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன்போது குதிரைக்கு தேவையான குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து வழங்காததன் காரணமாகவே இறந்தது' என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனைத்தொடர்ந்து அப்துல்லாஹ்புர்மெட் காவல் நிலைய பொலிஸார் இயக்குனர் மணிரத்னம் மீது விலங்குகளை துன்புறுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே விலங்குகள் நல அமைப்பான பீட்டா, திரைப்படத்தின் படப்பிடிப்பில் விலங்குகளை பயன்படுத்தவேண்டாம் என்றும், விலங்குகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வடிவத்தில் பயன்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இதுவரை எந்த குறுக்கீடுகளோ நெருக்கடிகளோ ஏற்படாத நிலையில், தற்போது குதிரை ஒன்று இறந்ததன் மூலம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கு புதிதாக அழுத்தமும் இடையூறும் ஏற்பட்டிருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.