சிறுவர்களுக்கு தடுப்பூசி : இணையத்தளங்களில் வெளியான செய்தி போலியானவை - சுகாதார மேம்பாட்டு பணியகம்

By Gayathri

03 Sep, 2021 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சகலருக்கும் தடுப்பூசி வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

தடுப்பூசி வழங்குவதற்காக 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்டுகின்றன. 

குறித்த செய்திகள் மாத்திரமின்றி அவற்றுடன் இணையவழி விண்ணப்பம் ஒன்றும் (கூகுள் விண்ணப்பம்) பகிரப்படுகிறது.

அவ்வாறு எந்தவொரு விண்ணப்பத்தையும் சுகாதார அமைச்சோ அல்லது தொற்று நோயியல் பிரிவோ கோரவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். இது போலியான செய்தியாகும். 

இது மிகவும் ஆபத்துடைய செயற்பாடுமாகும். எனவே யாரும் இந்த விண்ணப்பத்தினை பூரணப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

சுகாதார அமைச்சு அல்லது தொற்று நோயியல் பிரிவு தகவல்களை சேகரிக்குமாயின் அது குறித்து பிரதேச சுகாதார மருத்துவ பிரிவிற்கு அறிவிக்கப்படும். அத்தோடு சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வ பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right