(நா.தனுஜா)

வெலிகமவில் உள்ள அர்ஃபா பாடசாலையில் நேற்று கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும் பொதுமக்களை வெலிகம பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் தடியால் அடிப்பதை வெளிப்படுத்தும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிறிதொரு பிரதேசவாசியினால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி காணொளியை இன்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம, 'அர்ஃபா பாடசாலையில் கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும் மக்களுடன் வெலிகம பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் அருமையான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது..' என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

'தாம் எவ்விதத்திலும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படமாட்டோம் என்பதை பொலிஸார் நன்கறிந்திருப்பதன் காரணமாக, பொது இடங்களில் மக்களை அடிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர்கள் கருதுகின்றார்கள்' என்று அப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் அவர், 'அவ்வாறெனின் பொலிஸ்நிலையங்களுக்குள் என்ன நடக்கக்கூடும் என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன' என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சட்டத்தரணியும் சமூகசெயற்பாட்டாளருமான ஏர்மிஸா ரெகல், 'இந்தக் காணொளியில் சம்பந்தப்பட்டிருக்கும் பொலிஸ் அதிகாரி யாரென்பது உடனடியாக அடையாளங்காணப்பட்டு, அவருக்கெதிராக ஒழுக்காற்று மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் மேலும் பலர் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியிருப்பதுடன் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.