இலங்கையின் இன்றைய அரசாங்கம்  குருடன் மற்றும் முடவனைப் போன்ற நிலையிலேயே உள்ளது. நல்லாட்சி என்ற பெயர்ப்பலகையை முதன்மைப்படுத்திக் கொண்டு நாட்டின் வளங்களை விற்றுத் தீர்க்கிறது என்று  தேசிய  பிக்கு  முன்னணியின் செயலாளர்  வக்கமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.

திருகோணமலையில்  எஞ்சியுள்ள எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கு  விற்பனை  செய்யப்படவுள்ளன என்றும் தேரர் குற்றம் சாட்டினார். 

கொழும்பில் இடம்பெற்ற தேசிய பிக்கு முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே    வக்கமுல்லே  உதித தேரர்  இவ்வாறு தெரிவித்தார்.  

தேரர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 

நாட்டில்  இன்று ஹைபிரிட் ஆட்சியே இடம் பெறுகிறது. குருடன், முடவன் இணைந்து  செயற்படுவது போன்று தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நல்லாட்சி என்ற  பெயர்ப்பலகையை முதன்மைப்படுத்திக் கொண்டு நாட்டின்  வளங்கள் அனைத்தும் விற்றுத் தீர்க்கப்படுகின்றன. 

எனவே இந்த அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியாது. நாட்டை அடகுவைத்து வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று  ஆட்சி  நடத்தும் அரசே இன்று ஆட்சியிலிருக்கின்றது. 

 

நாடு இன்று ஒரே   இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் நட்டில் பணம்  சூறையாடப்படுகின்றது. 

அரச வளங்கள் ஒரு புறம் விற்பனை செய்யப்படுகின்றன. மறுபுறம் தனியார் மயமாக்கப்படுகின்றன. ராஜபக்ஷவின்  ஆட்சியைக் கவிழ்க்கும் போது புதிய ஆட்சி மீது எமக்கு  நம்பிக்கை இல்லையென்பதை நாம் அன்றே கூறினோம். அது இன்று  நிறைவேறியுள்ளது. 

நாட்டை  பொருளாதார நெருக்கடியில் இன்றைய ஆட்சியினரே தள்ளிவிட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையும் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. துறைமுகம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமல்ல.

திருகோணமலையில் 16 எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளன.  எமது  வாழ்க்கையோடு  இவர்கள் விளையாடுகின்றனர் என்றார்.