கொரோனா தொற்றால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளில் போதியளவிலான வைத்திய உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. 

அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில், டில்மா சிலோன் டீ நிறுவனமும் கஹவத்த பெருந்தோட்ட நிறுவனமும் இணைந்து  நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பராமரிப்பு சிகிச்சை நிலையம் ஒன்றும் அதற்கு தேவையான வைத்திய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

 

மத்திய மாகாண மக்களின் சேமநலனை பேணுவதற்கும் வியாபாரம் என்பது மக்களுக்கான பணி என்னும் எமது உறுதி மொழியை செயல்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட டில்மா சிலோன் டீ கம்பனியாலும் கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தினாலும் குறித்த மெரில் ஜே பெர்னாண்டோ அறக்கட்டளை நிறுவனத்தின் பராமரிப்பு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு 24 மில்லியனுக்கும் அதிக பெறுமதியிலான வைத்திய உபகரணங்களும் குறித்த நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இது குறித்து நாவலப்பிட்டி மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜானக சோமரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த இக்கட்டான சூழ்நிலையில் குறித்த உதவி மிகவும் வரவேற்கத்தக்கது. குறித்த வைத்தியசாலைக்கு நாவலப்பிட்டி மக்கள் மாத்திரமன்றி பொகவந்தலாவ, மஸ்கெலியா மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். 

ஆகவே தற்பொழுது இந்த வைத்தியசாலை குறித்த வைத்திய உபகரணங்களுடன் பிரதான வைத்தியசாலையாக தனது சேவைகளை பொது மக்களுக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் தேட்டத் தொழிலாளி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அதிகளவிலான தொழிலாளர்கள் போதிய வைத்திய வசதிகள் இன்றி உயிரிழக்கின்றனர். இந்த உதவி அந்த உயிரிழப்புக்களை குறைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.