Published by T. Saranya on 2021-09-03 10:19:29
(நா.தனுஜா)
சீனியின் விலையதிகரிப்பிற்கு சீனி இறக்குமதியாளர்கள் பல்வேறுவிதமான காரணங்களைக் கூறுகின்ற போதிலும், அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. அவர்கள் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சீனிக்கு அதிக விலையை நிர்ணயித்திருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணயவிலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச்சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலத்தில் அரிசி மற்றும் சீனியின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கும் நிலையில், இதற்கான தீர்வு குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்திருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சந்தையி;ல பொருட்களின் விலைகளும் உயர்வடைந்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசியப்பொருட்களான அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்துள்ளன.
சீனியின் விலையதிகரிப்பிற்கு சீனி இறக்குமதியாளர்கள் பல்வேறுவிதமான காரணங்களைக் கூறுகின்றனர். குறிப்பாக உலக சந்தையில் சீனியின் விலையதிகரிப்பு, கப்பற்கட்டண உயர்வு, டொலரின் பெறுமதி உயர்வு உள்ளடங்கலாக இறக்குமதியாளர்களால் கூறப்படும் சீனி விலையதிகரிப்பிற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.
எத்தகைய காரணமாக இருப்பினும் ஒருகிலோகிராம் சீனியை 220 ரூபாவிற்கு விற்பனை செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும். எனவே சீனி இறக்குமதியாளர்கள் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு அதிக விலையை நிர்ணயித்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது.
எனவே எமது அமைச்சுடன் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையும் இணைந்து நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான மிதமிஞ்சிய விலையுயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
கடந்த காலத்தில் சீனியை விற்பனை செய்வதற்கான நிர்ணயவிலை அறிவிக்கப்பட்ட போதிலும், விற்பனையாளர்கள் அதனை முறையாகப் பின்பற்றவில்லை.
அதனைத்தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் அவசியமான திருத்தங்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நிர்ணயவிலையை விடவும் அதிகவிலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கான தண்டப்பணத்தையும் சிறைத்தண்டனைக் காலத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
எனவே சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று எமது அமைச்சுடன் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையும் இணைந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு அவசியமான மேலும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
அதன்படி ஏற்கனவே பதிவுசெய்யப்படாத 52 அரிசி களஞ்சியசாலைகளும் 5 சீனி களஞ்சியசாலைகளும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மூன்று சீனி களஞ்சியசாலைகள் அத்தியாவசியசேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்திற்குக்கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதுடன் நாளைய தினம் (இன்றைய தினம்) சதொச விற்பனை நிலையங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.