இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

By Gayathri

02 Sep, 2021 | 10:33 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை வந்துள்ள தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வ‍தேச இருபதுக்கு 20 ஆகிய இரு வகையான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளதுடன், சர்வதேச இருபத்துக்கு இருபது போட்டித் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இம்மாதம் 2,4,7 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ள  சர்வதேச ஒருநாள் தொடரானது பிற்பகல் 3 மணிக்கும், 10,12,14 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் இரவு 8 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது. 

இந்தப் போட்டிகள் அனைத்தும் ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 77 தடவைகள் ஒன்றையொன்று சந்தித்துள்ளது. இதில் தென் ஆபிரிக்க அணி 44 தடவைகளும் இலங்கை அணி 31 தடவைகளும் வெற்றியீட்டியுள்ளன. 

எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையிலும், மற்றைய ஒரு போட்டி முடிவு எட்டப்படாத போட்டியாகவும் அமைந்தன.

இவ்விரண்டு அணிகளும் 13 தடவைகள் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் ஒன்றையொன்ற எதிர்த்தாடியுள்ளன. 

இதில் 7 தடவைகள் தென் ஆபிரிக்காவும் 5 தடவைகள் இலங்கையும் வென்றுள்ளன. 

எஞ்சிய ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்திருப்பினும், அந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியே வென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகிறது. 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத எஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண, சுரங்க லக்மால் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் இந்த மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு வகையான தொடர்களிலும் இடம்பெறவில்லை. 

மேலும், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவருக்கும் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள 'யோர்க்கர் மன்னன்' லசித்  மாலிங்க உடற் தகுதிக்கான சோதனையில் பங்கேற்காத காரணத்தால் இருபதுக்கு 20 இலங்கை அணியில் இடம் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இளம் அணித்தலைவரான தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் மற்றும் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

எனினும், அண்மையில் நிறைவடைந்த எஸ்.எல்.சீ.  இன்விடேஷனல் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த தினேஷ் சந்திமால் மற்றும் நுவன் பிரதீப் ஆகிய அனுபவ வீரர்களுக்கும்  இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, முற்றிலும் மாறுபட்ட இலங்கை கிரிக்கெட் குழாமொன்று இத்தொடரில் பெயரிடப்பட்டுள்ளது.

டெம்பா பவுமா தலைமையில் களமிறங்கும் தென் ஆபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இலங்கை கிரிக்கெட் அணியைப் போலவே புதுமுக வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளபோதிலும், இருபதுக்கு 20 அணியில் குயின்டன் டி கொக், டேவிட் மில்லர்  ஆகிய சிரேஷ்ட  வீரர்கள் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது. 

காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்டிச், லுங்கி நிகிடி, அண்டிலே பிலுக்வாயோ ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் கேஷவ் மகாராஜ், சர்வதேச இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திலுள்ள தப்ரெயிஸ் ஷம்ஸி ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இதில் பிலுவோயோ ஒருநாள் தொடருக்கான குழாத்திலும், நிகிடி இருபதுக்கு 20 குழாத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தத் தொடர் இரண்டு அணிகளுமே சர்வதேச கிரிக்கெட் முன்னேறுவதற்கு சிறந்த வாய்ப்பாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் சுகாதார  வழிமுறைகளைப் பின்பற்றி இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளதுடன், இந்தப் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right