(நெவில் அன்தனி)

மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (சாஃப்) சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியினருக்கு கத்தாரில் விசேட பயிற்சிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

கொரோனா தொற்று, தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக தேசிய அணியினால் முறையான பயிற்சிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனினும் தற்போது சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி பெத்தகானவில் உயிரியல் குமிழிக்குள் தேசிய வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இலங்கை அணியினர் கத்தாரில் பயிற்சி பெறுவதற்கு உதவுமாறு கத்தார் கால்பந்தாட்ட சங்கத் தலைவர் ஷெய்க் ஹமாத் பின் கலிபா பின் அல் தானியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளளத் தலைவர் ஜஸ்வர் உமர் கோரிக்கை விடுத்தார்.

இதன் பலனாக இலங்கை கால்பந்தாட்ட அணியினர் கத்தாரில் 16 நாட்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் சிநேகபூர் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கும் அல் தானி அனுமதித்துள்ளார் என ஜஸ்வர் உமர் கூறினார்.

கத்தாரில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக 24 வீரர்களைக்கொண்ட தேசிய குழாம் இம் மாதம் 8ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றது. 

இங்கிலாந்தில் வசித்து வரும் மார்வின் ஹெமில்டனும் டிலொன் டி சில்வாவும் அங்கிருந்து நேரடியாக கத்தாருக்கு சென்று இலங்கை குழாத்துடன் இணைந்துகொள்வர். அத்துடன் தேசிய வீரர்களுடன் பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் 11 பேர் கத்தார் செல்லவுள்ளனர்.

கத்தாரில் பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை அணியினர் அங்கிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி நேரடியாக மாலைதீவுகளுக்கு செல்வர்.

பங்களாதேஷ், இந்தியா, வரவேற்பு நாடான மாலைதீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றும் சாஃப் சம்பியன்ஷிப் மாலே விளையாட்டரங்கில் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கை தேசிய கால்பந்தாட்டக் குழாம்

சுஜான் பெரேரா, ருவன் அருணசிறி, தனுஷ்க ராஜபக்ஷ, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, சமோத் டில்ஷான், சரித்த ரத்நாயக்க, டக்ஸ்சன் பியூஸ்லஸ், மார்வின் ஹெமில்டன், சலன சமீர, ஜூட் சுபன், மொஹமத் முஷ்தாக், மொஹமத் பஸால், மொஹமத் ஷிபான், கவிந்து இஷான், டிலொன் டி சில்வா, வசீம் ராஸீக், மொஹமத் ஆக்கிப், அசிக்கூர் ரஹுமான், மொஹமத் ஹஸ்மீர், சுப்புன் தனஞ்சய, ரிப்கான் மொஹமத். அமான் பைஸர். அபீல் மொஹமத், கவீஷ் பெர்னாண்டோ, நுவன் கிம்ஹான.

பயிற்றுநர் குழாத்தில் புதிதாக முன்னாள் தேசிய வீரர்களான மொஹமத் ஹசன் ரூமி (கலம்போ எவ்சி தலைமைப் பயிற்றுநர்), ராஜமணி தேவசகாயம் (புளூ ஸ்டார் தலைமைப் பயிற்றுநர்) ஆகிய இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பயிற்றுநராக ரூமியும் உதவிப் பயிற்றுநராக தேவசகாயமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அணியின் தலைமைப் பயிற்றுநராக தொடர்ந்தும் அமீர் அலார்ஜிக்கும் கோல்காப்பாளர் பயிற்றுநராக அமீர் டொக்சான்அல்டிஸும் செயற்படுவர். அணியின் முகாமையாளராக ஆசிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.