நா.தனுஜா
காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கும் பதில்களுக்காகக் காத்திருப்போருக்குமான ஓர் சிறிய நிகழ்வு என்று குறிப்பிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கருத்து வெளியிடுவதற்கு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை மற்றும் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய உறுப்பினர்கள், அலுவலகத்தின் எதிர்கால செயற்பாடுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான இடைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவொரு முக்கிய விடயம் தொடர்பாகவும் அக்கலந்துரையாடலில் பேசியவர்கள் கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் அவர் மேலும் விசனம் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை மற்றும் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அவர்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமையன்று, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கலந்துரையாடலில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளரான முன்னாள் நீதியரசர் உபாலி அபேரத்ன, நீதியமைச்சர் அலி சப்ரி, பிரிவெனா கல்விக்கட்டமைப்பின் உதவிப் பணிப்பாளர் கரவிலகொட்டுவ தம்மதிலக தேரர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.
அந்தவகையில் இக்கலந்துரையாடல் குறித்து அம்பிகா சற்குணநாதன் செய்திருக்கும் டுவிட்டர் பதிவில், காணாமல்போனோர் அலுவலகத்தின் சார்பில் அதில் எந்தவொரு பதவியையும் வகிக்காத அல்லது பதவி வகிப்பதாக அடையாளப்படுத்தப்படாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், 'சுயாதீனம் என்றால் என்னவென்று அவர்கள் அறியவில்லை போல் தெரிகின்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மன்னிப்பது ஒன்றே (நிர்பந்திக்கப்பட்ட) நல்லிணக்கம் மற்றும் அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரேவழி என்பதே குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களில் முக்கியமாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டியது என்றும் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை அம்பிகா சற்குணநாதனின் மேற்படி பதிவை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எம்.ஏ.சுமந்திரன், 'உண்மையைக் கண்டறிவதே காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். சட்டத்தின் ஊடாக அவ்வலுவலகத்தின் ஆணையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணி அதுவேயாகும். எனினும் கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராகக் களமிறங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துவந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறுகின்றார்' என்று பதிவிட்டிருக்கின்றார்.
மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் விரிவான தொடர் பதிவைச் செய்திருக்கும் த்யாகி ருவன்பத்திரண, அதனுடன் தொடர்புடைய புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கின்றார்.
உலகளாவிய ரீதியில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முன்னரங்களில் இருப்பவர்கள் பெண்களேயாவர். ஆனால் இலங்கையின் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் ஆண்கள் மாத்திரமே வளவாளர்களாகக் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்கள் 'காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இன்னமும் இயங்குகின்றது. அதன்மீது நம்பிக்கை கொள்ளமுடியும்' என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்கள். மாறாக அதில் கருத்து வெளியிடுவதற்குக் குறைந்தபட்சம் ஒரேயொரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
'அதனை விரிவுரை என்றே கூறவேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கும் பதில்களுக்காகக் காத்திருப்போருக்குமான ஓர் சிறிய நிகழ்வு என்று குறிப்பிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பேசுவதற்கு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சூம் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துரையாடலில் இணைந்திருந்தவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அதனால் அவர்கள் குறுஞ்செய்தி வடிவில் அவர்களது கேள்விகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் இப்போது யார் அங்கம்வகிக்கின்றார்கள்? அதன் தற்போதைய செயற்பாடுகள் என்ன? பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான இடைத்தொடர்பு எத்தகையாக உள்ளது? என்பது குறித்து அக்கலந்துரையாடலில் பேசியவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. எதுஎவ்வாறெனினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்டவை தொடர்ந்தும் இயங்குவதாக நீதியமைச்சர் கூறினார். இழப்பீட்டை வழங்குவதென்பது ஓர் சர்ச்சைக்குரிய விடயமல்ல என்று எவரேனும் நீதியமைச்சருக்கு எடுத்துக்கூறுங்கள்' என்று அவர் அந்தப் பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM