மட்டக்களப்பு  சின்ன ஊறணி பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண்  தங்க ஆபரணங்கள் மற்றும் 85 அயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கடையில் ஒருபகுதியில் பலசரகு வியாபாரமும் ஒருபகுதியில் நகை ஈடுபிடிக்கும் வியாபாரமும் இடம்பெற்றுவந்த நிலையில் ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலையில் கடையின் உரிமையாளர் கடைக்கு சென்ற நிலையில் கடையின் பின்பகுதி கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டமை அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த கொள்ளையன் முகத்தை மறைத்தபடி சூட்சகமாக கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு  மற்றும் மேப்பநாய் சகிதம் பொலிசார் சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.