'புரட்சித் தளபதி' நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, 'வீரமே வாகை சூடும்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக், நடிகர் விஷாலின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனர் து.‌ப.சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. 

இதில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். 

இவர் ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த 'தேவி 2' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். 

வசனகர்த்தா பொன் பார்த்திபன் வசனங்களை எழுத, கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

நடிகர் விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், விஷாலின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. 

படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் எக்சன் இரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் இணையத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு இதற்கு கிடைத்து வருகிறது.

இதனிடையே நடிகர் விஷால் நடிப்பில் தயாராகிவரும் 'எனிமி' படத்தின் வெளியீடு விரைவில் இருக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 'வீரமே வாகை சூடும்' அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.