12 வயது மாணவர் மீது  கொதிக்கும் தேநீரை ஊற்றிய சம்பவம் தொடர்பாக   கைது செய்யப்பட்ட சங்கீத பாட ஆசிரியரை கடுமையான எச்சரிக்கையுடன்  நீர்கொழும்பு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

 ஆசிரியரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த கடுமையாக எச்சரித்ததோடு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில் உள்ள  அரச பாடசாலை ஒன்றின் சங்கீத பாட ஆசிரியரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.  

சிறு வயது மாணவர் ஒருவர் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றியது சங்கீதம் கற்பிக்கும்  மிகவும் மென்மையான குணமுடைய ஆசிரியர் ஒருவர் செய்யக்கூடாத மிகவும் கீழ்த்தரமான செயல் என நீதவான் திறந்த நீதிமன்றத்தில் கூறினார்.

பாடசாலை சிற்றூண்டிச்சாலையில் 12 வயது சிறுவன்  குறித்த ஆசிரியரின்மேல் மோதியதன் காரணமாக ஆசிரியரின் கையில் இருந்து தேநீர் கோப்பையின் ஒருபகுதி ஆசிரியரின் மேல் கொட்டியுள்ளது. 

இதன்காரமாக கோபமடைந்த ஆசிரியர் எஞ்சியிருந்த தேநீரினால் சிறுவனின் மீது தாக்கியுள்ளார். ,கொதி நீர் காயத்திற்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் தளுபத்தை பிரதேசத்தில் உள்ள  அரச பாடசாலையின் சங்கீத பாட ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தமை குறிப்பிடத்தக்கது.