யாழ்.குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு உறவினர்கள் , நண்பர்கள் இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர். 

குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்ய முற்படட வேளை , அதற்கு பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸார் இது தொடர்பில் யாழ்.நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து , நீதவான் சடலத்திற்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு , அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். 

அதனை அடுத்து இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும் , தொற்று உறுதியானதை அடுத்து , சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்தனர். 

அதன் பின்னர் இளைஞனின் அஸ்தியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

அதனை அடுத்து , பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் ஒன்றிணைந்து இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்தனர். 

பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து ,  மேளங்களுடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு சென்றனர். 

பெருமெடுப்பில் நடைபெற்ற இவ் இறுதி நிகழ்வில் இளைஞனின் பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.