ரயில்வே துறையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுராதபுரம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களில் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க இலங்கை ரயில்வே திணைக்களம் பரிசீலித்து வருகிறது.

கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களின் சுகாதார வசதிக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து திணைக்களம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரால் அண்மையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

இந் நிலையில் கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மேலதிகமாக, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தகவல்களின்படி ரயில்வே துறையின் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.