(இராஜதுரை ஹஷான்)

 

நாட்டு மக்கள் கொவிட் தாக்கத்தினாலும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினாலும்  பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம்மக்களை பழிவாங்கும் வகையில் வர்த்தமானி வெளியிடுவதை தவிர்த்து   மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

Articles Tagged Under: சுனில் ஹந்துனெத்தி | Virakesari.lk

கொவிட் பரவலின் ஆரம்ப கட்டத்தில் 5000 ரூபாவாக இருந்த நிவாரண தொகை அத்தியாவசி பொருட்களின் விலை  சடுதியாக அதிகரித்துள்ள போது 2000 ஆயிரம் ரூபாவாக குறைந்துள்ளமை அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை சுட்டிக்காட்டியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை முழுமையாக முடக்குங்கள் என சுகாதார தரப்பினர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்கள்.

நடுத்தர மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஆகவே நாட்டை முடக்க முடியாது  என ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் தற்போது அரசாங்கம்  மாபியாக்களை கருத்திற் கொண்டு நடுத்தர மக்களின் வாழ்க்கை செலவை உயர்த்தியுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் 10000 ஆயிரம் ரூபா பெறுமதியிலான நிவாரண பொதி  மக்களின் வரிப்பணத்தின் ஊடாக வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் திகதியிலிருந்து நிவாரண பொதி வழங்குவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து  மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டத்தினால் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களக்கு 2000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுகிறது.அரச சேவையாளர்கள், ஓய்வூதியலாளர்கள், சமுர்த்தி பயனாளர்கள்,  வயது வந்தோர்  மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறுவோர்.

இந்த 2000 ஆயிரம் ரூபாவை பெறுதற்கு தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.கொவிட் பரவல் ஆரம்ப கட்டத்தில் 5000 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிவாரண நிதி  வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள வேளையில் 2000 ஆயிரம் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால்  அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவையின் அனுமதியுடன் 18 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில்  கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யவும், 700 இலட்சம் செலவில் முதலீட்டு சபை காரியாலயத்தை புனரமைக்கவும், செலவிடவுள்ளது.தற்போதைய நிலையில் இவையனைத்தும் வீண் செலவுகள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என்றார்.