எம்.மனோசித்ரா

கர்ப்பிணிகள் தமது கர்ப்ப காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு மாத்திரமின்றி , பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும் என்று டி சொய்சா மகளிர் வைத்தியசாலையின் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணியொருவரின் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதை மேற்கோள் காட்டி விசேட வைத்திய நிபுணர் அமில பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

குறித்த தாய் தான் கர்ப்பம் தரித்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதன் ஊடாக வயிற்றிலிருந்த சிசுவுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

தாயொருவர் குழந்தையொன்றுக்கு வழங்கக் கூடிய சிறந்த அன்பளிப்பொன்றை இந்த தாய் அவரது குழந்தைக்கு வழங்கியுள்ளார்.

எனவே தற்போது இலங்கையில் வழங்கப்படுகின்ற சைனோபார்ம் , அஸ்ட்ராஜெனெகா, பைசர் மற்றும் மொடர்னா ஆகிய எந்த தடுப்பூசியானாலும் அதனை கர்ப்ப காலத்தில் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானதாகும் என்றும் அவர் தனது பதில் குறிப்பிட்டிருந்தார்.