இராஜதுரை ஹஷான்

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 400 கொள்கலன்களை மாத்திரம் அடுத்த வாரம் விடுவிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதியமைச்சருக்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கிடையில் நேற்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பால்மா, சீனி மற்றும் சமையல் எரிவாயு  அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதிலும், அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதற்கும் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் சந்தையில் இப்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை  நிலையான தன்மையில் பேணுவதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டொலரின் பெறுமதி அதிகரித்ததால்  துறைமுக சேவை கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால்  பொருள் இறக்குமதியாளர்கள் தங்களின்  பொருட்களை துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிள 400 கொள்கலன்கள் துறைமுகதத்தில் சிக்கியுள்ளன.  இவற்றை மாத்திரம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.