எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான  நல்லாட்சி அரசாங்கத்தின்   வரவு, செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அளவில் முன்வைக்கப்படவுள்ள நிலையில்  வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான   தீவிரமான முயற்சிகளில்   நிதி அமைச்சும் திறைசேரியும்   ஈடுபட்டுள்ளன.  

புதிய வரவு, செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக பல்வேறு   ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள்   நிதித்துறை சார்ந்த நிபுணர்கள்,  அமைச்சுக்களின் அதிகாரிகள்,  தொழிற்துறை சார் நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும்   சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடமிருந்தும்  நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க  அடுத்த ஆண்டுக்கான  வரவு, செலவு திட்டம் தொடர்பில்   பேச்சுவார்த்தைகளையும் ஆலோசனைகளையும்  நடத்தி வருகிறார். 

அதன்படி  நவம்பர் மாதம்  10 ஆம் திகதி அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய நல்லாட்சி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு, செலவுத் திட்டத்தை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

தேசிய நல்லாட்சி அரசாங்கம்  தனது முதலாவது வரவு, செலவுத்திட்டத்தை கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.