தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட இரண்டு இடங்களிலுள்ள சிறப்பு முகாமில் வாழும் இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு 317 கோடி ரூபாயில் புதிய நலத் திட்டங்களுக்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு சட்ட பேரவையில் உள்ள கட்சிகள் நன்றி தெரிவித்தனர். 

அதன் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,' சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மீதான வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்' கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது, 

' பேரவை விதி எண் 110 கீழ் நான் வெளியிட்ட அறிவிப்புகளை சுட்டிக்காட்டி கட்சித் தலைவர்கள் வரவேற்று பேசினர். அதில் பேசிய வேல்முருகன், சிறப்பு முகாம்களில் உள்ளோரின் நிலையைப் பற்றிச் சொன்னார். 

திருச்சியில் உள்ள சிறப்பு முகாம்களில் 80  இலங்கை தமிழர் உள்ளிட்ட 115 வெளிநாட்டினர் உள்ளனர். அவர்கள் மீதான 47 வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

44 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. 63 வழக்குகள் இலங்கைத் தமிழர்கள் மீதுள்ளன. இதில் 38 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு 175 ரூபாய் உணவு படியாகவும், வானொலி, தொலைக்காட்சி பெட்டியை கேட்கவும், பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 

அவர்கள் தங்களது உறவினர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஜூலை 15ஆம் திகதி இலங்கை தமிழர்கள் 10 பேர் அவர்களது தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். 

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசுக்கு உரிய தகவலை தெரிவித்து, இலங்கை தமிழர்கள் அவர்கள் நாட்டுக்கு திரும்ப, அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.' என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.