(எம்.மனோசித்ரா)

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் வழங்கவுள்ள தீர்வை எழுத்து மூலமாக அதாவது வர்த்தமானி அறிவித்தல் அல்லது சுற்றுநிரூபத்தினூடாக விரைவாக வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தற்றும் அதிபர் - ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்களுக்கிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெற்றது. 

இது தொடர்பில் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் 

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கடந்த 24 வருடங்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 40 நாட்களுக்கும் அதிகமாக சகல அதிபர் , ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலிலிருந்தும் விலகியுள்ளனர்.

இதன் காரணமாக இவ்வாண்டு தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதே போன்று ஆசிரியர்களும் சிரமங்களுக்கு மத்தியிலேயே உள்ளனர். எனவே அரசாங்கம் வழங்கவுள்ள தீர்வை எழுத்து மூலமாகவும் , விரைவாகவும் வழங்க வேண்டும்.

இதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அல்லது சுற்று நிரூபம் ஒன்றின் ஊடாக அறிவித்தால் அது நம்பிக்கைக்கு உரியதாகக் காணப்படும்.

அதே போல் பயிற்சியை நிறைவு செய்து இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படவில்லை. இது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையையும் வழங்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என்றார்.