எம்மில் சிலருக்கு ரெட்ரோக்னாதியா எனப்படும் குறுகலான தாடை பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இத்தகைய பாதிப்பின் காரணமாக அவர்களால் சில தருணங்களில் சுவைத்து உண்பதோ அல்லது உறக்கமின்மை பாதிப்போ ஏற்படக்கூடும். இதற்கு தற்போது சத்திரசிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக  மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரெட்ரோக்னாதியா பாதிப்பு என்பது எம்முடைய முகத்தில் அமையப் பெற்றுள்ள கீழ் தாடை மற்றும் மேல்தாடை ஆகியவற்றின் சமச்சீரற்ற தோற்றத்தை குறிப்பிடும் ஒரு குறைபாடு. பிறக்கும் போதோ அல்லது விபத்தின் போதோ இத்தகைய குறைபாடு உண்டாகும். சிலருக்கு மேல் தாடை மற்றும் கீழ் தாடை இடையே உள்ள வேறுபாடு உற்று நோக்கிய பின்னரே அவதானிக்க இயலும். ஆனால் இத்தகைய பாதிப்புள்ளவர்கள் சுவாசிப்பதில் சில தருணங்களில் சிரமம் ஏற்படக் கூடும். சிலருக்கு உறங்கும்போது சுவாசம் சீராக இயங்காத நிலை ஏற்பட்டு, உறக்கமின்மை பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு இத்தகைய மாறுபாடான தோற்றத்தால் தன்னம்பிக்கை சார்ந்த விடயங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

இத்தகைய காரணங்களால் இந்த சமச்சீரற்ற தாடை அமைப்பை சீராக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். சிலருக்கு இத்தகைய பாதிப்பால் உணவை நன்றாக மென்று  சாப்பிடுவதில் சிரமம் உண்டாகும்.

சிலருக்கு பிறக்கும்போது இத்தகைய குறைபாட்டுடன் பிறப்பார்கள். வேறு சிலருக்கு இதன் பாதிப்பு இளமைப் பருவம் வரை கண்டறியப்படாமல் இருக்கக்கூடும். இருப்பினும் இத்தகைய பாதிப்பு Pierre-Robin Syndrome, Hemifacial microsomia, Nager Syndrome, Treacher Colins Syndrome ஆகிய நோய்க்குறிகள் ஏற்பட்டாலோ அல்லது வாயின் உட்பகுதி அல்லது வெளிப்பகுதியில் ஏதேனும் கட்டிகள் இருந்து, அதை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளும்போதோ இத்தகைய பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு தாடையின் உள்ள மூட்டுப் பகுதியில் தேய்மானத்தின் காரணமாகவும் வலி ஏற்பட்டு இத்தகைய பாதிப்பை உண்டாக்கும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட  குழந்தைகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வெவ்வேறு வகையான சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை மூலம் முழுமையான  நிவாரணம் அளிக்க முடியும். மேலும் தற்போது வளர்ச்சி அடைந்துள்ள நவீன தொழில்நுட்பங்களால் முப்பரிமாண வடிவ தொழில்நுட்ப உதவியுடன் இதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால், எதிர்காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சனை உண்டாகும். குறிப்பாக இரவு நேரத்தில் உறங்கும்போது சுவாச தடை ஏற்பட்டு தூக்கமின்மை பாதிப்பை உண்டாக்கும்.

டொக்டர் சீனிவாஸ்

தொகுப்பு அனுஷா