திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 218 கொரோனா மரணங்கள் மொத்தமாக பதிவாகிய நிலையில் இம்மாதம் மாத்திரம் 69 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (27) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை கொரோனா இடைத்தங்கல்  முகாம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நோயாளர்களுக்கு ஏற்ற விதத்தில் உண்வு வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது நோயாளர்களுக்கு உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இது குறித்து நோயாளர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

 இது தொடர்பில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 8,500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஒகஸ்ட் மாதம் மாத்திரம் 3300 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 218 நோயாளர்கள் மரணித்துள்ளதாகவும், இந்த மாதம் மட்டும் 69 நோயாளர்கள் மரணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவதினால் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் இட வசதிகளை அமைத்து வருவதாகவும் நாளை 28 ம் திகதி  முதல் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் திருக்கோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா மேலும் தெரிவித்தார்.