புத்தளம் கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

எனினும், இந்த சுற்றிவளைப்பின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் குழி ஒன்றுக்குள் மிகவும் சூட்சகமான முறையில் 21 உரமூடைகளில் பொதி செய்யப்பட்ட 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளூர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் இந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு இப்பந்தீவு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த நான்கு நட்களில் மட்டும் 1978 கிலா கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19 ஆம் திகதி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 22ஆம் திகதி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும், இன்று வெள்ளிக்கிழமை (27) அதே பகுதியில் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.