மேலும் 2 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த தடுப்பூசியின் வருகையுடன் சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளின் அளவுகள் மொத்தமாக 18 மில்லியனாக அதிகரிக்கும்.

அதேநேரம் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் சினோபார்ம் தடுப்பு அளவுகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக உயர்வடையும் என்றும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளின் அளவும் நாளை நாட்டை வந்தடையும்.

நாட்டில் இதுவரையில் 9 665 009 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் , 4 863 109 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. 

இதே போன்று கொவிஷீல்ட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக 1 353 936 பேருக்கும் , 881 738 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் 159 088 பேருக்கு முதற்கட்டமாகவும் , 25 489 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளதோடு , பைசர் தடுப்பூசிகள் 305 639 பேருக்கு முற்கட்டமாகவும் 150 001 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது. 

மொடர்னா தடுப்பூசிகள் 771 449 பேருக்கு முதற்கட்டமாகவும் 543 959 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை காலை வரை 12 255 121 பேருக்கு முதற்கட்டமாகவும் , 6 464 296 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.