(எம்.மனோசித்ரா)

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாத இறுதிக்குள் 30 வயதை விடக் கூடிய சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூபா தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் , மூன்றாம் கட்ட தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

உலகில் மிக உயர் மட்டத்தில் காணப்படுகின்ற கியூபாவின் சுகாதார சேவைகள் தொடர்பான அனுபவம் , தெளிவு மற்றும் தொழிநுட்பம் என்வற்றை இந்நாட்டுக்கும் வழங்குவதற்கான பறிமாற்ற வேலைத்திட்டத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு சுகாதார அமைச்சர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த கியூபா தூதுவர் , இவ்வாண்டு இறுதிக்குள் கியூபாவின் சகல பிரஜைகளுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் , அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே நூறு வீதம் உபயோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் ஏனைய நாடுகளுக்கும் கியூபாவின் தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் போது தூதுவர் தெரிவித்தார்.

அந்நாட்டு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார சேவைகள் நாட்டின் அந்நிய செலாவணிக்கு இடையே அதிக பரிமாற்ற வீதத்தை வழங்குகின்றன என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு தடுப்பூசி வழங்குதல் மாத்திரம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தாது என்றும் சுகாதார விதிமுறைகள் உயர் மட்டத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மற்றும் தூதுவரால் தெரிவிக்கப்பட்டது.