இந்த நாட்டில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,

இனவாதத்துடன் செயற்பட முனைந்தால் இந்த நாடு மீண்டும் ஒரு யுத்தத்தை சந்திக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழ்பேசும் மக்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக,  இந்த நாடு 30 வருடங்களுக்கு மேலாக ஒரு போரை சந்தித்து இருந்தது.

இந்த போரின் மூலமாக தமிழ், முஸ்லிம், சிங்களம் என பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்பை இந்த நாடு சந்தித்து இருக்கின்றது.

2009 இல் யுத்தம் மெளனித்தபோதும் இந்த போர் எதற்காக? ஏன்? தொடங்கப்பட்டது என்பதற்கு அப்பால் மீண்டும் இந்த அரசாங்கம் மேலாதிக்கவாதிகள் தமிழ்பேசும் மக்களை துன்புறுத்தும் நிலைமை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அதிகாரிகள் மட்டத்திலே மீண்டும் ஒருமுறை அரங்கேறி இருக்கின்றது.

கடந்த 11 ஆம் மே மாதம் இலங்கை பொதுச்சேவை ஆணைகுழுவினால் திட்டமிடல் பிரிவில் திட்டமிடல் அதிகாரிகளாக இருந்தவர்களை பதவி உயர்த்தி பொதுநிர்வாக அமைச்சுக்கு 10 பேர் சிபார்சு செய்யப்பட்டு இருந்தார்கள்.

பணிப்பாளர் நாயகங்களாக திட்டமிடலுக்கு பதவியுயர்தி தற்போது சிங்கள பேரினவாதிகளினால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இது உண்மையில் கண்டிக்கத்தக்க விடயம். பணிப்பாளார் நாயகமாக பெரும்பாண்மை இனத்தவர்கள்தான் வரவேண்டும் என்றால் வடக்கு, கிழக்கில் ஏன் சிங்களவர்களை நியமித்துள்ளார்கள்?

இவர்கள் விடயத்தில் அரசியல் இருக்கின்றது. அரசியல்வாதிகள் தலையீடு இருககின்றது என நான் கருதுகின்றேன்.

இத்தனை பட்டறிவுகளை கொண்டிருந்தாலும் மீண்டும் தமிழ்பேசும் மக்களை தள்ளுவதற்கான ஒரு உத்தேசமாக இது இருக்கின்றதோ அல்லது இந்த நாடு 'சிங்கள நாடு சிங்கள தேசம்' சிங்களவர்களை கொண்டுதான் அரசியல் ரீதியாகவோ நிர்வாக ரீதியாகவோ இந்த நாட்டை நடத்தப்போகின்றீர்கள் என்றால் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உங்களுக்கு தேவையில்லையா? அல்லது இல்லை தமிழ்பேசும் மக்களை நீங்கள் அடிமைகளாக வைத்திருக்க போகின்றீர்களா? என அவர்  கேள்வியெழுப்பினார்.