ஜப்பானில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் வெளிநாட்டு பங்கேற்பாளர் ஒருவர் கொவிட் -19 இன் தீவிர அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவை மேற்கோள்காட்டி கியோடோ செய்திச் சேவை வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதல் டோக்கியோ விளையாட்டு பங்கேற்பாளர் இவர் ஆவார்.

பாரா ஒலிம்பிக்குடன் தொடர்புடைய வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரே திங்களன்று கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் ஒரு விளையாட்டு வீரர் அல்ல.

பாராலிம்பிக்ஸுடன் தொடர்புடைய மேலும் 15 கொவிட்-19 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும், விளையாட்டு நிகழ்வுகள் பாதுகாப்பாக நடைபெறுகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

15 பேரில் தடகள கிராமத்தில் தங்கியிருந்த வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் அடங்குவர்.

ஆகஸ்ட் 12 முதல் இதுவரை பராலிம்பிக் கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 184 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

உலகெங்கிலும் இருந்து 4,403 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பாராலிம்பிக்ஸ், மூன்று வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் முடிந்தவுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிற பகுதிகள் கொவிட் -19 அவசர நிலைக்கு உட்பட்டுள்ளன, ஏனெனில் நாடு மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஆபத்தான உயர்வுடன் போராடுகிறது.