இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. 

இதில் முதல் டெஸ்ட் சம நிலையில் ஆனதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

முதலாவது ஓவரின் 5 ஆவது பந்து வீச்சில் ராகுல் டக்கவுட்டுன் ஆட்டமிழக்க அடுத்து வந்த புஜாராவும் ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தகர்த்து எறியப்பட்ட 40.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரம் அவர்களால் பெற முடிந்தது.

ரோகித் சர்மா (19) ரிஷாட் பந்த் (18) மாத்திரம் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீத், ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ஓட்டங்களை எடுத்து விக்கெட் இழப்பின்றி  42 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. 

ஹசீப் ஹமீத் 60 ஓட்டங்களுடனும் ரோரி பேர்ன்ஸ் 52 ரன்கள் ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.