அஜித் ரோஹணவுக்கு கொவிட் : சமூகவலைத் தளங்களில் வெளியான புகைப்படம் போலியானது

By T Yuwaraj

25 Aug, 2021 | 08:39 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதானியும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று முதல் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக, அஜித் ரோஹணவுக்கு நெருக்காமன வட்டாரங்கள் வீரகேசரிக்கு தெரிவித்தன.

 எவ்வாறாயினும் சமூக வலைத் தளங்களில் அஜித் ரோஹண கவலைக் கிடமாக சிகிச்சைப் பெறுவதாக தகவல்கள் வெளியான போதும், அதில் எந்த உண்மையும் இல்லை என  குறித்த தகவல்கள் உறுதி செய்தன.

 கொவிட் தொற்றுக்கு எதிராக சிகிச்சைப் பெறும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்பதை பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக தகவல்களும் உறுதி செய்தன.

அஜித் ரோஹண சிகிச்சைப் பெறும் புகைப்படம் என சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரப்பப்படும் நிலையில், அப்புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளது.

டிக் டொக் சமூக வலைத் தள செயற்பாட்டாளரான வெளிநாட்டவர் ஒருவர், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்களை  சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே, அதை அஜித் ரோஹணவின் புகைப்படம் என சிலர் பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right