துடுப்பாட்டத்தில் அதிரடியாகவும் களத்தடுப்பில் புலியாகவும் செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரும் ஜாம்பவானுமாகிய திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார்.

1999 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்த டில்சான், தனது 17 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்காகவும் நாட்டுக்காகவும் பல சேவைகளை செய்துள்ளமை யாவரும் அறிந்த உண்மை.

தனக்கென ஒரு துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டில்ஸ்கூப் மன்னன் டில்ஷான்  சரியான ஒரு தருணத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ள டில்சான் துடுப்பாட்டத்தில் அதிரடியை காட்டியது போன்று ஓய்வின் போதும் அதிரடியான பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 

 • தோல்வியுடன் விடைபெறுவது கவலையாகதான் உள்ளது.
 • குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா திறமையான வீரர்கள்
 • டெஸ்ட் போட்டியில் 193 ஓட்டங்களை பெற்றதை மறக்க முடியாது 
 • இந்தளவிற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என நினைக்கவில்லை.
 • ஏஞ்சலோ மெத்தியூஸ் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளார்.
 • திறமையான வீரர்களுக்கு மாத்திரம் இடம்கொடுக்க வேண்டும்.
 • உள்ளூரில் நிறைய இருபது20 போட்டிகைள நடத்த வேண்டும்.
 • இலங்கை அணியில் அடித்தாடுமளவிற்கு வீரர்களுக்கு பலம் இல்லை.
 • சிறந்த விக்கெட் காப்பாளர்கள் அணியில் உள்ளனரா?
 • தவறுகள் விடும் போது வீரர்கள் மீது கோபம் கொள்ளக் கூடாது.
 • பயிற்சியாளராக செயற்பட விருப்பம் இல்லை.
 • அரசியலில் எக்காரணம் கொண்டும் பிரவேசிக்கமாட்டேன்.
 • ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்கும் எவ்வித போட்டிகளிலும் சில மாதங்களுக்கு பங்கேற்கமாட்டேன்.
 • வீரர்களை நிர்வகிக்கும் ஒருவர் எனக்கு எதிராக செயற்பட்டார்.  2 இலட்சம் டொலரில் 10 வீதம் ஒப்பந்த பணத்தை கேட்டார். 

தோல்வியுடன் விடைபெறுகின்றீர்கள். கவலை இல்லையா?

கடந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சித்தோம் எனினும் முடியாமல் போனது. இன்றைய போட்டியில் இன்னும் 20 ஓட்டங்களை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

தோல்லியுடன் விடைபெறுவது கவலையாகத்தான் உள்ளது. எனினும் ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளில் எதிரணிக்கு சவாலளித்தே தோல்வியைத் தழுவினோம். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். தலையில் உள்ள பாராத்தை இறங்கி வைத்தது போன்று நினைக்கின்றேன். தற்போது சுதந்திரமாக உள்ளேன்.

திறமையான இளம் வீரர்கள் அணியில் உள்ளனரா?

தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்றனர். தனஞ்சய டி சில்வாவுக்கு நல்ல திறமை உள்ளது. அவருக்கு இன்னும் நல்ல பயிற்சியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். 

இந்த இரு வீரர்களுக்கும் சிறப்பான பாதை ஒன்றை அமைத்து கொடுத்தால் இலங்கை கிரிக்கெட் இவர்களிடமிருந்து சிறந்த பெறுபேற்றை எதிர்பார்க்கலாம்.

உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எதுவும் உள்ளதா?

சுமார் 17 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத பல அனுபவங்கள் உள்ளன. 

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியை மறந்து விட முடியாது. பலத்த கஷ்டங்களுக்கு மத்தியிலேயே அணிக்குள் இடம் கிடைத்தது. 

இதேபோன்று லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 193 ஓட்டங்களை குவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 

இதேபோன்று என்னுடைய சகல போட்டிகளையும் என்னால் மறந்து விட முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்துடனேயே விளையாடினேன். கடந்த கால போட்டிகள் இன்று விளையாடியது போன்று உள்ளன. 

இன்னும் ஒரு வருடத்துக்கு விளையாடி இருக்கலாம். உங்களின் ஓய்வுக்கு கிரிக்கெட் தேர்வு குழு அழுத்தம் கொடுத்ததா?

தேர்வுக் குழு எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை. எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை. எனவே தான் தற்போது ஓய்வுபெ முடிவெடுத்தேன். 

அவ்வாறு இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்தால் என்னால் சிறப்பாக களத்தில் செயற்பட முடியுமான என்ற சந்தேகமும் உள்ளது. 

கடந்த கலங்களில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் அழுத்தம் காரணமாகவே ஓய்வு பெற்றனர். எனவே எனக்கு அவ்வாறான நிலையொன்றுவருவதற்கு முன்னரே நான் ஓய்வு பெறுவது சந்தோசமாகவுள்ளது.

இத் தொடரில் கிடைத்த ஆதரவு குறித்து விளக்க முடியுமா?

நான் ஓய்வு பெறும் இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக பெருந்திரளான மக்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 

நான் சிறப்பாக விளையாடிய போதும் விளையாடமல் இருந்த போதும் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தார்கள். நான் ஓய்வை அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு கிடைக்கப்பெற்றது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவை ஒரு சில வார்த்தைகளால் கூறி விட முடியாது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அணிக்காக 100க்கு 200 வீதம் எனது பங்களிப்பை வழங்கியமையாலேயே பெருந்திரளான மக்கள் எனக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதனையிட்டு பெருமிதமடைகின்றேன். பணத்தால் ஈடு செய்ய முடியாத மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது.

நீங்கள் அணித் தலைவராக இருந்த போது அணியை வழிநடத்த ஏனைய வீரர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறுனீர்கள். இதேபோன்ற ஒரு நிலை தற்போதைய தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கும் ஏற்பட்டுள்ளதா?

ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான தேசிய அணி இளம் வீரர்களைக் கொண்டே காணப்படுகின்றது. அணியை முன்னெடுத்து செல்வது ஏஞ்சலோவுக்கு பாரிய சவாலாகும். சிரேஷஷ்ட வீரர்கள் யாரும் அணியில் தற்போது இல்லை. சந்திமால் மாத்திரமே அனுபவ வீரராக உள்ளார். 

எனவே இளம் வீரர்களை வழிநடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு ஏஞ்சலோவிடம் உள்ளது. இது ஒரு பாரிய சவாலாகும். 

குறிப்பாக திறமையான வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்புக்கொடுத்து அணியை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

திறமையான வீரர்களுக்கு இடம்கொடுத்தால் அணித் தலைவர் என்றவகையில் எவ்வித பிரச்சினையும் எதிர்ப்பும் ஏற்படாது. 

இலங்கை அணி தற்போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை இருபதுக்கு - 20 அணி மீண்டெழ எவ்வளவு காலம் எடுக்கும்?

இலங்கை அணி தனது பின்னடைவில் இருந்து மீண்டெழ சிறிது காலம் எடுக்கும். இலங்கையில் பிரிமியர் லீக் போன்ற இருபது20 போட்டிகளை நடத்தினால் திறமையான வீரர்களை இனம் கண்டு கொள்ள முடியும். 

குறிப்பாக இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தனது நாடுகளில் இருபது-20 போட்டிகைள நடாத்தி திறமையான வீரர்களை இனம் கண்டுள்ளன.

ஐ.பி.எல். போட்டிகளின் மூலம் வெளியுலகிற்கு வந்தவரே மெக்ஸ்வெல். இதுபோன்று இலங்கையிலும் கூடுதலான இருபது 20 போட்டிகள் நடத்த வேண்டும். வெளிநாடுகளிலிருந்து சிரேஷ்ட வீரர்களை நாட்டுக்கு வரவழைத்து அவர்களின் மூலம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளலாம். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதன் மூலம் ஒரு சிறப்பான அணியை கட்டியெழுப்ப முடியும்.

அணியில் சிறந்த விக்கெட் காப்பாளராக யாரை குறிப்பிட முடியும்? 

அணியில் உள்ள அனைத்து வீரர்களும் புதுமுக வீரர்கள் ஆவர். விக்கெட்காப்பாளராக செயற்பட வேண்டுமென்றால் கடுமையான பயிற்சி தேவை. நான் அணிக்கு வரும் போது விக்கெட் காப்பாளராகவே வந்தேன். இதன்போது அணியில் விக்கெட் காப்பாளராக களுவிதாரண செயற்பட்டுக் கொண்டிருந்தார். 

இதன்பின்னர் தனிப்பட்ட முயற்சியில் கடுமையான உழைப்பின் மூலம் எனது விக்கெட் காப்பாளருக்கான திறமையை அதிகரித்துக் கொண்டேன். எனவே தற்போது அணியில் உள்ள வீரர்களுக்கு கடுமையான பயிற்சி தேவை. 

இதேபோன்று அணியில் யாருக்காவது எனது உதவி தேவைப்படுமாயின் எனது அனுபவத்தைக் கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு நான் தயாராக உள்ளேன்.

இதேபோன்று அணி வீரர்கள் தவறுகள் செய்யும் போது அவர்கள் மீது கோபம் கொள்ளாது உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். இதன் மூலம் வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

அணியில் அடித்து ஆடக் கூடிய வீரர்கள் தற்போது உள்ளனரா?

எமது அணியில் முக்கிய ஒரு பிரச்சினையாக இந்த விடயம் உள்ளது. அணியில் அடித்து ஆடுமளவிற்கு எந்த வீரர்களும் இல்லை. அடித்து ஆடுவதற்கு பலம் தேவை. ஏனைய நாடுட்டு அணிகளிலும் இந்த பிரச்சினை உள்ளது. இதுவரை எமது அணியில் அடித்து ஆடுமளவிற்கு வீரர்களை நான் இனம்காணவில்லை. 

திசர பெரேராவுக்கு அடித்தாடும் திறமை உள்ளது. அவருக்கும் இன்னும் பயிற்சிகளை வழங்க வேண்டும். ஒரு இருபதுக்கு 20 அணியில் பின்வரிசையில் அடித்தாடும் வீரர்கள் கட்டாயம் தேவை. இதுதொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

பயிற்சியாளராக செயற்பட விருப்பம் உள்ளதா?

எதிர்காலத்தில் பயிற்சியாளராக செயற்படமாட்டேன் என நான் தனிப்பட்ட முறையில் தீரமானித்து விட்டேன். எனினும் யாருக்கும் என்னிடமிருந்து தனிப்பட்ட முறையில் உதவிகள் தேவைப்படுமாயின் நான் பயிற்சி வழங்க தயாராக உள்ளேன்.

ஐ.பி.எல். போன்ற போட்டிகளில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?

இதுவரையில் எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. எனினும் பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் எதற்கும் உடன்படவில்லை. காரணம் சில காலம் குடும்பத்துடன் எனது காலத்தை செலவழிக்க வேண்டும்.

அரசியலுக்கு வருவீர்களா?

அரசியல் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாமல் அதற்குள் காலடி எடுத்து வைத்து துன்பத்துக்குள்ளானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். 

இனம், மதம், பேதம் இல்லாமல் எனக்கு ஆதரவு உள்ளது. இதை இல்லாமல் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதி என்ற பெயர் இல்லாமல் கூட என்னால் மக்களுக்கு சேவை செய்ய முடியும். 

எனவே எக்காரணம் கொண்டும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனினும் நல்லத் தலைவர்களுக்கு எனது உதவி தேவைப்படுமாயின் அவர்களுக்கு உதவி செய்ய தயராக உள்ளேன். 

வீரர்களை நிர்வகிக்கும் ஒருவர் உங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இது உங்களுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதா?

ஆம். குறித்த நபர் என்னுடன் கோபம்கொள்ள ஒரு காரணம் உள்ளது. அதாவது முதலாது ஐ.பி.எல். போட்டியில்  விளையாட  வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆனால் கிடைக்கவில்லை. 

பின்னர் சமிந்த வாஸ் உதவியுடன் டெல்லி அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இதன்போது டெல்லி அணிக்காக 2 இலட்சம் டொலருக்கு கைச்சாத்திட்டேன். இரண்டு கிழமைகளில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறிய நபர் 10 வீதம் ஒப்பந்த பணத்தை கேட்டார். 

உங்களுக்கு எதற்காக இந்த பணத்தை நான் வழங்க வேண்டும். நீங்கள் எனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லையே என்றேன். இதற்காகத்தான் எனக்கு எதிராக அவர் செயற்பட்டார். இதை நான் கனவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் எனது திறமையால் நான் முன்னேற்றமடைந்தேனே தவிர வீழ்ச்சியடையவில்லை. தற்போது கூட சில வீரர்களுடன் நான் கதைப்பது இல்லை. ஆனால் களத்திற்குள் செல்லும் போது நாட்டுக்காக விளையாடுவேன். அனைத்து வீரர்களுடன் கதைப்பேன். ஆனால் களத்துக்கு வெளியில் சில வீரர்களுடன் கதைக்கமாட்டேன்.