(எம்.சி.நஜிமுதீன்)

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது  அரசாங்கத்தின்  முயற்சிகளை  குழப்பியடைப்பதற்கு   இனவாத சக்திகள்  கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றன.  இனவாத சக்திகளின்செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இச்சம்மேளனத்தில் வரவேற்புரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

ஐக்கிய தேசியக் கட்சியானது சகல இன மக்களுக்காகவும் செயற்பட்டு வருகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர், பறங்கியர் என சகல இன மக்களின் நல்வாழ்வுக்காகவும் எமது கட்சி செயற்படுகின்றது.

இன, மத  பேதங்களுக்கு  அப்பால்  ஒன்றிணைந்த இலங்கையை  கட்டியெழுப்பும் வகையில்  எமது தலைவர்   ரணில் விக்கிரமசிங்க தற்போது  கட்சியின் செயற்பாடுகளை   முன்னெடுத்து வருகின்றார்.  

நாட்டில்  நல்லிணக்கத்தை  ஏற்படுத்தவும்  சிறுபான்மையின மக்களின்  பிரச்சினைகளுக்கு   உரிய தீர்வைக் காணவும்    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசியக்கட்சியின்  நல்லாட்சி அரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.  இதற்கு  சிறுபான்மையின மக்கள் உட்பட சகல இன மக்களும் ஆதரவு  தெரிவிக்கவேண்டியது   அவசியமானதாகும். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது  அரசாங்கத்தின்  முயற்சிகளை  குழப்பியடைப்பதற்கு   இனவாத சக்திகள்  கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றன.  இத்தகைய இனவாத சக்திகளின்செயற்பாடுகளுக்கு ஒருபோம் அடிபணியாது  நாம் எமது நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  

யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள்,  மற்றும்  யுத்தக்குற்றச்சாட்டுக்கள்,  குறித்தும்   அரசாங்கம் என்ற வகையில்  நாம்  பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.  அதற்கான  நடவடிக்கைகளும்,  துரிதகதியில்  எடுக்கப்படவேண்டும்.  இவ்வாறு  யுத்தத்தினால்  ஏற்பட்ட வடுக்கள் களையப்பட்டால் மாத்திரமே  நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.