(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர்   செவ்வாய்க்கிழமை   ஜெனிவாவில்  ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர்  செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார். 

இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின்   உயர்மட்டக் குழுவினர் எவரும் பங்கேற்காத நிலையில் , ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர  வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே  கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார்.

செவ்வாய் கிழமை  ஆரம்பிக்கப்படும் கூட்ட தொடர்   இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.    இதன்போது உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கையின் சார்பில்   மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளதுடன்   உறுப்பு நாடுகளினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.