முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறக்கும்போது அவருக்கு வயது 65.

மங்கள சமரவீரவுக்கு கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை அமைப்பாளராக அரசியலுக்குள் நுழைந்த மங்கள சமரவீர அவர்கள், 1989 ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன் பின்னர் பல தடவைகள் இவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்களின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராகப் பணியாற்றிய மங்கள சமரவீர அவர்கள், 2005 ஆம் ஆண்டு முதல் 2007 வரை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்த அவர் 2015ஆம் ஆண்டு முதல் அந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றினார். அனுபவம் மிக்க அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார்.

1956 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மாத்தறையில் பிறந்த மங்கள சமரவீர அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.