டெல்டாவின் மூன்று வகையான மாறுபாடுகள் ஒன்றாக அடையாளங்காணப்பட்ட ஒரே ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது.

தற்பொழுது இதன் நான்காவது மாறுபாடும் இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் டெல்டா மாறுபாடு தற்பொழுது ஆதிக்கம் செலுத்தி வருவதால் இரண்டாம் அலையின் போது பரவியிருந்த கொரோனாவின்  அல்பா மாறுபாடு  மெதுவாக குறைவடைந்து வருவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக கடந்த காலங்களில் 88 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 4 மாதிரிகள் மாத்திரமே அல்பா வகையாக கண்டறியப்பட்டுள்ளன. 

டெல்டா  இலங்கையில் மாத்திரமல்ல பல்வேறு நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் ஆகவே தான் பல்வேறு நாடுகள் மீண்டும் முடக்கத்தை அறிவித்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

இலங்கையில், அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு நாளைக்கு சுமார் 6000 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் இலங்கையில் இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200 ஐ தாண்டும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். 

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கு உத்தரவை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும்  பரவலைத் தடுக்க வீடுகளுக்குள் இருக்குமாறும் மக்கள்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தனி நபர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளில் இருந்தே தற்பொழுது அதிகளவிலான மருத்துவ வசதிகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் தற்போதைய அழிவு, மக்கள் தொகையில் பெரும் சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்,  அதனால் தான் வைத்திய அதிகாரிகள் தடுப்பூசிகளை  சீக்கிரம் வழங்க முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்பொழுது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை ஏற்றி வருகின்றனர். ஏனெனில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.