(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போதே அந்நாட்டு தூதுவர் யூரி பி. மேட்டேரி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீண்டகால நட்பு மற்றும் ரஷ்யாவுடனான பரந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்பீரிஸ் வலியுறுத்தினார்.  

பல்தரப்புக் கோட்பாடுகளில் கொள்கை மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளையும் தெரிவித்தார்.

 

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக இதன்போது அந்நாட்டு தூதுவர் தெரிவித்தார்.  

 

இந்த சந்திப்பு, வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் 2022ஆம் ஆண்டு இலங்கை - ரஷ்யா இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூறுதல் ஆகிய விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டன.

 

கொவிட்-19 தொற்றுநோயால் இன்று மனிதகுலம் எதிர்கொள்ளுகின்ற பொதுவான சவால்களுக்கு பகிரப்பட்ட தீர்வுகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும்  கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.