(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பெயார்வெல் பகுதியில் 21  அடி பள்ளத்தில் இருந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

எனினும் இதில் உயிரிழந்தவரின் மனைவியும், பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதோடு, சிறு காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இவ்வாறு உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியின் சாரதியான அட்டன் பகுதியை சேர்ந்த என்.பிரஸ்டன் 29 வயது மதிக்கதக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.