(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சில அரச மற்றும் தனியார் துறையினர் தமக்கான அனுமதியை முறைகேடாக பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது. 

மாகாணங்கள், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்க  வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் | Virakesari.lk

எனவே இது குறித்து அரச மற்றும் தனியார் நிறுவன பிரதானிகள் அவதானம் செலுத்த வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக நாளாந்த வருமானத்தை ஈட்டும் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

நாட்டிலுள்ள தனவந்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தேவையேற்படின் குறிப்பிட்ட தொகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் ஊடாக உரிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சில அரச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஊழியர்களையே சேவைக்கு அழைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஊழியர்களை அழைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை முறைகேடாக பயன்படுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சிலர் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்கின்றனர் என்றார்.